குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டிருப்பவர்கள் உயிருடன் இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அரச தரப்பு எம்.பி.யான பஸ்மின் ஷரீப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம் பெற்ற தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
குருக்கள் மடம் படுகொலை விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர் எமது நீதி அமைச்சர் மீது குற்றம் சுமத்தி இருந்தார். ஆனால் குருக்கள் மடம் விவகாரம் தொடர்பில் நீதி விசாரணைக்கு நீதி அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அவர் குருக்கள் மடத்துக்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். அதனால் இந்த விவகாரத்தில் நிச்சயமாக முஸ்லிம்களுக்கு நீதிகிடைக்கும் . அதேநேரம் இந்த படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டு உயிருடன் இருப்பவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும்..
இதேவேளை, ஒருசில யூடியுப் அலைவரிசைகள் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றன. அந்த அலைவரிசைகள் தொடர்ந்தும் இவ்வாறு இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டால், அரசாங்கத்தில் இருக்கும் 8 முஸ்லிம் எம்.பி.க்களும் இணைந்து அந்த அலைவரிசைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயங்கமாட்டோம். அதேபோன்று சில சிங்கள ஊடகங்களும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் விடயங்களை தெரிவித்து வருவதுடன் பலஸ்தீன் தொடர்பில் முஸ்லிம் எம்.பிகள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றன. இந்த நடவடிக்கை தொடருமானால் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.