பிரான்ஸில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக 200 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 3 நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில், அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மொத்தம் 577 உறுப்பினர்கள் உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரூக்கு எதிராக 364 உறுப்பினர்களும், ஆதரவாக 194 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.19 உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.
இதன்மூலம் கடந்த 12 மாதங்களில் 4-வது பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தள்ளப்பட்டுள்ளாா். இதையடுத்து புதிய பிரதமராக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லெகர்னுவை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நியமித்துள்ளார். இந்நிலையில் பிரான்ஸில் புதிய அரசு பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதையடுத்து முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுத்த பொலிஸார், முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனிடையே, நாட்டின் மேற்கு பகுதி நகரமான ரென்ஸ் பேருந்து ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் புருனோ தெரிவித்துள்ளார்.
போராட்டத்துக்கு யாரும் தலைமை தாங்காமலேயே நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பிரான்ஸ் நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போராட்டங்களில் ஈடுபட்டதாக இதுவரை 200 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.