முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
இன்று (27) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன, முன்னாள் ஜனாதிபதி இனி ஒரு கைதி அல்ல என்பதால், அவர் தனியார் வைத்தியரை அணுகலாம் என்றும் கூறினார்.
அவர் பெறும் சிகிச்சையுடன் அவரது கடுமையான நீரிழப்பு தற்போது குணமடைந்து வருவதாகவும் வைத்தியர் கூறினார்.
இதற்கிடையில், தேசிய வைத்தியசாலையில் எந்தவொரு நோயாளிக்கும் ஒரே மாதிரியான சேவையை வழங்குவதாகவும், சேவைகளுக்காக மருத்துவமனைக்கு வரும் எவரும் சமமாக நடத்தப்படுவதாகவும் வைத்தியர் ருக்ஷான் பெல்லன சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஆராய தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தாலேயே குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், அதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.