பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம் மாதம் சம்பளம் வழங்கப்படாது எனத் தபால்மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
மாதாந்த சம்பளம் பெற வேண்டுமானால், உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறித்தி கேட்டக்கொண்டதோடு, பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற் சங்கங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இப் பணி நிறுத்தத்தின் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்தார்.
இருந்தாலும் மத்திய தபால் நிலையத்தில் குவிந்து கிடந்த தபால் பைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இது தொடர்பில் கூறிய அவர்,
“சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து நிதி பெறப்பட வேண்டும். பணி நிறுத்தத்தின்போது சம்பளக் கொடுப்பனவுக்கு நிதி விடுவிக்கப்படாது என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கடமைக்கு திரும்பியவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்க வாய்ப்புள்ளது. பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.