பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளம் காரணமாக அங்கு இதுவரை 307 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் சில மாகாணங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மழையால் கைபர் பக்துன்கவா மாகாணத்திலுள்ள புனர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது . 74 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
இதையடுத்து பாகிஸ்தானில் மழை, பெருவெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணியில் 2,000 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கைபர் பக்துன்கவா மீட்பு ஏஜென்சியின் செய்தித் தொடர்பாளர் அகமது ஃபைசி கூறும்போது, “கனமழை, பல இடங்களில் நிலச்சரிவு, சாலைகள் அடித்து செல்லப்படுதல் போன்ற காரணங்களால் அப்பகுதிகளுக்கு ஆம்புலன்ஸை எடுத்துச் செல்லுதல், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளது. சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அங்கு மீட்புப் பணியாளர்கள் கால்நடையாக நடந்து சென்று பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார்.