கரையோர ரயில் மார்க்கத்தில் கிங்தொட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட காலி குமாரி கடுகதி ரயிலை மீள தடமேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மருதானை ரயில் நிலையத்திலிருந்து பெலியத்த நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த ரயில் நேற்று (16) மாலை தடம் புரண்டது.
இதன் விளைவாக, அம்பலங்கொடை ரயில் நிலையம் வரை கரையோர ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.
ரயில் தடம் புரண்டதால் ரயில் மார்க்கம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், அதன் புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று (17) காலை இயக்க திட்டமிடப்பட்ட ரயில்கள் கிங்தொட்ட ரயில் நிலையத்திற்குப் பிறகு அமைந்துள்ள தொடந்துவ, ஹிக்கடுவ, கஹாவ மற்றும் அம்பலங்கொடை ரயில் நிலையங்களில் இருந்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெலியத்தவிலிருந்து இயக்க திட்டமிடப்பட்ட ரயில் காலி ரயில் நிலையம் வரை பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த ரயிலில் பயணிப்பவர்கள் பேருந்துகள் மூலம் கிங்தொட்ட ரயில் நிலையத்திற்குப் பிறகு அமைந்துள்ள ரயில் நிலையம் ஒன்றுக்கு வந்து வேறு ரயிலுக்கு மாறிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.