எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி.
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும் அவலமும் மனிதப்பேரழிவும் உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பையும் மக்கள் போராட்டத்தையும் சந்தித்து வரும் அதே வேளை, இஸ்ரேலிலும் மனிதாபிமானமுள்ள மக்கள் மத்தியில் நெத்தன்யாஹு அரசின் மீது அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதுடன், மனிதக்கொலைகளால் உள்நாட்டிலும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். அத்துடன், உலக சமாதானத்தைச்சீர்குலைக்கும் செயற்பாடாகவும் இருந்து வருகின்றது.
இம்மனிதகுல பேரவலத்தை நிறைவுக்கு கொண்டு வர வேண்டுமென உலகின் பல்வேறு அரபு, மேற்குல நாடுகள் முயற்சியின் பின்னணியில் சவூதி அரேபியாவும் அதன் தலைமையிலான அரபு உலகமும் இரு தேச தீர்வு (Two-State Solution) எனப்படும் வழி மூலம் இச்சிக்கலை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றது.
இரு தேச தீர்வு (Two-State Solution) என்ற கருத்தை முதன்முதலில் 1937ம் ஆண்டு பிரித்தானிய
அரசின் பீல் ஆணைக்குழு முன்மொழிந்தது. இதனை முதல் சர்வதேசளவிலான அதிகாரபூர்வ திட்டமாக 1947ல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் (181) கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தரப்பால் இரு தேச தீர்வு (Two-State Solution) திட்டம் முன்வைக்கப்பட்டாலும் உள்ளக முரண்பாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அந்த வகையில், சவூதி அரேபியாவின் இரு தேச தீர்வு (Two-State Solution) திட்டமான தற்போதைய யோசனை என்பது புதிதாகத்தோன்றியதல்ல. இது 2002ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அரபு சமாதான முன்மொழிவு (Arab Peace Initiative) என்பது தான் இத்திட்டத்தின் அடிப்படையாகும்.
சவூதி அரேபியா தலைமையிலான இந்த யோசனையானது 1967ம் ஆண்டைய எல்லைகளுக்குள் கிழக்கு ஜெரூசலாமை தலைநகராகக்கொண்டு சுயாட்சி பாலஸ்தீன அரசை ஏனைய நாடுகளின் ஆதரவுடன் நிறுவும் திட்டமாகும்.
தற்போது சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் மன்னரின் ஆலோசகராக முக்கிய பொறுப்புகளை ஏற்றுச் செயற்படும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் உட்பட அரச உயர் மட்டத்தினர் பலஸ்தீனத்திற்கு தீர்வு வேண்டி இரு பக்கத்தினருடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் தொடர்ந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறான சவூதியின் முயற்சியின் பலனாக இத்திட்டத்திற்கு ஐநா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இவையனைத்தும் அமைதியை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
இத்திட்டத்தை இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு தலைமையில் கடுமையான வலதுசாரி அரசு பலஸ்தீன அரசு ஒழுங்குபடுத்தப்படாதது. ஹமாஸ் போன்ற இயக்கங்கள் பயங்கரவாதப் பின்னணியில் இருப்பதான காரணங்களை முன்வைத்து இரு தேச தீர்வைத்தள்ளிப்போடுகிறார்கள்.
மேலும், பலஸ்தீனம் தனி நாடாக உருவாவது தங்களது நாட்டுக்கு ஆபத்து என்ற அடிப்படையிலும் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.
இவ்விடயத்தில், ஹமாஸ் அமைப்பின் நிலைமை மிகவும் மாறுபட்டது. அவர்கள் இஸ்ரேலின் நிலைப்பாட்டை முழுமையாக ஏற்கவில்லை. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் பலஸ்தீனத்தேசம் உருவாகுவதை ஏற்கும் வகையில் சில சமரசங்களை முன்வைத்துள்ளனர்.
எனினும், இஸ்ரேலின் காசா மீதான இராணுவத் தாக்குதல்கள் மற்றும் கணிசமான பாதுகாப்பு நிபந்தனைகள், ஹமாஸை தீர்வுக்குத்தயாராக மறுக்கும் சூழ்நிலைக்கே இட்டுச்செல்கின்றன.
இஸ்ரேலானது ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். காசா நெருங்க முடியாத பாதுகாப்பு பரப்பாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கின்றது. ஹமாஸ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்விவகாரத்தில் பலஸ்தீனத்தின் நிலைப்பாடாக
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பி.எல்.ஓ (PLO) அமைப்பு, இரு தேச தீர்வுக்கு ஆதரவளிக்கிறது.
அவர்கள் 1967 எல்லைகளை அடிப்படையாகக்கொண்டு, கிழக்கு ஜெரூசலேம் தலைநகராகும் ஒரு சுயாதீன தேசம் வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளனர். ஆனால், இஸ்ரேலின் குடியிருப்புப்போக்குகள், அமெரிக்காவின் அதிருப்தியான நடத்தை அவர்களின் நம்பிக்கையையே சீர்குலைக்கின்றன.
இவ்விடயத்தில் மேற்குலகத்தை நம்பலாமா?
கடந்த காலங்களில் நடைபெற்ற வரலாற்றுப்பிழைகள், இஸ்ரேலின் நலன்சார் நிலைப்பாடுகள், வணிக, பாதுகாப்பு நலன்கள் உள்ளிட்டவற்றால் மேற்குலகம் பலஸ்தீனத்திற்கு சீரான நீதியை வழங்குமென்பதில் பலரும் சந்தேகம் கொண்டுள்ளனர். “மேற்குலகம் கொடுக்கும் வாக்குறுதிகள், வார்த்தைகளாகவே மாறி விடக்கூடாது” என்ற கருத்தும் பலஸ்தீன ஆதரவாளர்களிடையே நிலவுகிறது.
இரு தேச தீர்வுத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் சாதகங்களாகப் பார்க்கும் போது, இரு தேச தீர்வு பலஸ்தீன மக்களுக்கு நீண்டநாள் எதிர்பார்த்த சுதந்திரத்தை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
இஸ்லாமிய நாடுகளுக்கும் மேற்குலக நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேம்படும்.
இஸ்ரேல் 1967ம் ஆண்டு எல்லைக்குள் திரும்ப வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகின்றது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான மோதல்கள் குறையலாம்.
இவ்வாறான பல நன்மைகள் இத்திட்டத்தினூடாக ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தீர்வு செயற்படுத்தப்பட முடியாமல் போனால், பலஸ்தீனர்கள் மற்றும் சுயாதீன பலஸ்தீனை விரும்பும் உலக மக்களும் மீண்டும் ஏமாற்றமடைவார்கள்.
இஸ்ரேலின் பாதுகாப்பு நிபந்தனைகள் பலஸ்தீனத்தின் முழுமையான சுதந்திரத்துக்கு தடையாக அமையலாம். ஹமாஸ் போன்ற அமைப்புகள் ஒதுக்கப்பட்டால், உள்நாட்டு முரண்பாடுகள் தீவிரமாகலாம் போன்ற இவ்வாறான பாதகங்களும் ஏற்படலாம்.
நீண்டு கொண்டு செல்லும் பலஸ்தீன, காசா போரையும் அதனால் ஏற்படும் அழிவுகளையும் தொடர்ந்தும் அனுமதிக்காது, ஊகங்கள், சந்தேகங்களை அடைப்படையாகக்கொண்டு இது சரி வருமா? இல்லையா? என்று விவாதம் செய்து காலத்தை கடத்தாது, இப்பிரச்சினைக்கு தீர்வாக இரு தேச தீர்வுத்திட்டத்தை சவூதி முன்வைத்திருப்பதை முன்மாதிரியான செயலாக பார்ப்பதோடு, இது தொடர்பான சவூதி அரேபியாவின் கடப்பாடு என்ன என்ற கேள்வுகளுக்கு பதிலை பின்வருமாறு பார்க்கலாம்.
சவூதி அரேபியா என்ற நாடு, ஒரே நேரத்தில் இஸ்லாமிய உலகத்தின் தலைமை பொறுப்பையும், மேற்குலகத்துடனான நட்பு நிலையையும் சமநிலைப்படுத்தும் கடினமான பணியை மேற்கொண்டு வருகிறது.
புனித ஹஜ்/உம்ரா கடமைகளுக்காகவும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும் சவூதி உலகத்தில் நம்பிக்கை பெறும் நாடாகவே திகழ்கிறது.
இதற்கேற்ப, பலஸ்தீனத்திற்கு நீதி வழங்குவதில் முனைப்புடன் செயற்பட வேண்டியது சவூதியின் நீதி, சமாதானக்கடமை மட்டுமின்றி, மதப்பொறுப்பாகவும் இருக்கிறது.
பலஸ்தீனம் அதற்கான நியாயமான எல்லைகளோடு சுதந்திர நாடாக உருவாகும் வரை இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாடோடு, இஸ்ரேல் தொடர்ந்து செய்து வரும் அட்டூழியங்களைக்கண்டித்தும் அதற்கெதிராக செயற்பட்டும் வருகிறது.
எனவே, இதுவொரு நம்பிக்கையின் சந்தர்ப்பமாக மாறுமா? அல்லது மீண்டும் ஏமாற்றத்தை தருமா? என்பது உலகம் எப்படி பதிலளிக்கிறது என்பதில் தான் இருக்கிறது.
உலக நாடுகள் இவ்விடயத்தில் அமெரிக்காவையோ இஸ்ரேலையோ பகைத்துக்கொண்டு பலஸ்தீனத்திற்கு தீர்வு வழங்க வேண்டிய எவ்விதத்தேவைகளும் இல்லாத நிலையில், பலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு உலக நாடுகளில் வாழும் மக்களின் போராட்டங்களும் சற்று உலக நாடுகளை பலஸ்தீன விவகாரத்தில் திரும்பிப்பார்க்க வைத்தாலும், பலஸ்தீன பிரச்சினைக்குத்தீர்வு என்று வரும் போதும் சவூதி அரேபியாவின் தீர்வை ஆதரிப்பதால் சவூதியுடனான நட்பும் அதன் பயன்களும் தங்களுக்குத்தேவை என்ற அடிப்படையில் பல நாடுகள் இன்று பலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மனநிலைக்கு வந்திருப்பதைப் பார்க்கலாம்.
இவ்விவகாரத்தில் சவூதி அரேபியா தனது பங்களிப்பை முழுமையாக வழங்கி வரும் இந்நேரத்தில், உலக நாடுகளும் நீதியுடனும் மனமுடைந்த பலஸ்தீன மக்களது குரலுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகின்றது. உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதோடு, அவற்றின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் கடப்பாடு சவூதி அரேபியாவிற்கு இருக்கிறது.
சவூதி அரேபியாவின் தீர்வுத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் அரபுலகிலும் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் செல்வாக்குமிக்க பலமான நாடாக சவூதி மாறி விடுமென்பதால் சவூதியின் எதிரிகள் இத்தீர்வு வருவதை ஒரு போதும் விரும்பமாட்டார்கள்.
சவூதி அண்மையில் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களை நிறுத்த, சர்வதேச சமூகம் வலுவான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் பாலஸ்தீன மக்களைச்சூழ்ந்துள்ள மனிதப்பேரழிவை முடிவுக்கு கொண்டு வரலாம்” 1967ம் ஆண்டு எல்லைகளுக்குள் கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்டு சுயாட்சி பாலஸ்தீன அரசை உருவாக்கும் இரு நாடு தீர்வே நீடித்த அமைதிக்கான ஒரே வழி” என உறுதியாகத்தெரிவித்துள்ளது.
இவற்றைத்தடுப்பதற்கான குழப்பங்களை ஏற்படுத்த தவறான கருத்துக்களையும் சந்தேகங்களையும் பரப்பும் வேலைகளை திட்டமிட்ட அடிப்படையில் எதிரிகள் செய்வார்கள். அண்மைக்காலமாக இவ்வாறான சில செயற்பாடுகளும் நடந்ததைப் பார்க்கலாம்.
எனவே, இரு தேச தீர்வு என்ற திட்டம் தொடர்பான விமர்சனங்கள், ஐயப்பாடுகள், ஊகங்களை விட்டுவிட்டு இறைவனிடம் இத்தீர்வு பலஸ்தீனத்திற்கான விடிவாக அமைய வேண்டுமென பிரார்த்தனை செய்வோம்.
நிச்சயமாக இறைவன் எமது பிரார்த்தனையை ஏற்று ஹுதைய்பியா உடன்படிக்கையின் பின்னராக கிடைத்த வெற்றி போல பலஸ்தீனத்திற்கான வெற்றியை வழங்கப்போதுமானவன்.