கொலம்பியாவின் பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டதனை அடுத்து, கொலம்பிய ஜனாதிபதி ஐவன் டியூகியூ தொலைகாட்சியில் உரையாற்றியுள்ளார்.
அவரை கைது செய்த பாதுகாப்பு படையினருக்கு பாராட்டைத் தெரிவித்த அவர், கொலம்பியாவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இதுவொரு பாரிய அடியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூற்றாண்டில் கைது செய்யப்பட்ட பிரபல கடத்தல்காரர் அவர் என பல தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
ஒட்ரோனியல் என அழைக்கப்படும் டெயிரோ அன்ரோனியோ யுசகா என்ற குறித்த கடத்தல்காரரைக் கைது செய்வதற்கான தகவல்களை வழங்குபவர்களுக்கு, 8 இலட்சம் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என கொலம்பிய அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.
அதேவேளை, அவரை உயிருடனோ அல்லது சடலமாகவோ பிடிப்பதற்கு உதவுபவர்களுக்கு 50 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா முன்னர் அறிவித்திருந்தது.
இராணுவம், வான்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது உயர் காவல்துறை அதிகாரி ஒருவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனாமாவுடனான எல்லை பிராந்திய மாகாணமான அன்றியோக்குவியா மாகாணத்தில் உள்ள கிராமத்தில் மறைந்திருந்த வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரைக கைது செய்வதற்காக பல வருடங்களாக ஆயிரங்கணக்கான முப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை.
தற்போது கொலம்பிய அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில், ‘கல்ப் கிளான்’ எனப்படும் மிகவும் சக்தி வாய்ந்த குற்றக் குழுவின் தலைவர், 10 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டதனை அடுத்து அவரின் சகோதரரான ஒட்ரோனியல் குற்ற குழுவின் தலைமைப் பொறுப்பினை கையேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரக ஆயுதமேந்திய அந்தக் குழுவினர் அரசாங்கத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக இதுவரை காலமும் செயற்பட்டனர்.
அந்தக் குழவைச் சேர்ந்த 1,800 இற்கும் மேற்பட்டவர்கள் சர்வதேச ரீதியாகப் பல நாடுகளில் இயங்கி வருவதாக நம்பப்படுகின்றது.
அவர்களில் பலர் கொலம்பியாவிலிருந்து மிகத் தொலைவில் உள்ள நாடுகளான ஆர்ஜண்டீனா, பிரேஸில், ஹொண்டூரஸ், பெரு மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தலில் மட்டுமல்லாது, சட்டவிரோத தங்க சுரங்க தொழில், ஆட்கடத்தல் மற்றும் கப்பம் கோரும் நடவடிக்கைகளிலும் அவர்கள் பெருமளவில் ஈடுபட்டதாகக் கொலம்பிய அரசாங்கத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Date:
கொலம்பியாவின் பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவர் கைது!
