ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை (03) மாறியுள்ளது.
அதன்படி, ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து முறையான நற்சான்றிதழ்களைப் பெற்றதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் உற்பத்தித் திறன் கொண்ட இருதரப்பு ஒத்துழைப்பை வளர்க்கும் என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு, இதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று கூறியது.
அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினர்.
அப்போதிருந்து, அவர்கள் சர்வதேச அங்கீகாரத்தை நாடுகிறார்கள்.
அதேநேரத்தில் இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான நிபந்தனைகளையும் அவர்கள் அமுல்படுத்துகிறார்கள்.
இதுவரை எந்த நாடும் தாலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், அந்தக் குழு பல நாடுகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் சில இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், பெரும்பாலும் பெண்கள் மீதான அதன் கட்டுப்பாடுகள் காரணமாக தாலிபான் அரசாங்கம் உலக அரங்கில் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
1996 முதல் 2001 வரை ஆட்சியில் இருந்ததை விட, தாலிபான்கள் ஆரம்பத்தில் மிகவும் மிதமான ஆட்சியை முன்னெடுப்பதாக உறுதியளித்த போதிலும், 2021 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய உடனேயே பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தொடங்கினர்.
பெண்கள் பெரும்பாலான வேலைகள் மற்றும் பொது இடங்களில், பூங்காக்கள், குளியலறைகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பெண்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை நிலைநிறுத்த தலிபான்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் வலியுறுத்தி வருகின்றனர்
மேலும் ஏப்ரல் மாதம் தலிபான்கள் மீதான தடையை நீக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.