சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (03) சந்தேக நபர்களை தலா 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சரீரப் பிணையிலும், தலா 2 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டது.
கிரிபத்கொடை பகுதியில் அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றை போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஜெயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரக்கோன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இவர்களில் மேர்வின் சில்வா கடந்த மார்ச் மாதம் கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது குற்றப் புலனாய்வுத் பிரிவு (சிஐடி) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.