உலகளாவிய ஆடை தொழில்நுட்பப் பன்முக நிறுவனமான MAS Holdings, நிலைத்தன்மைக் கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கான தன்னுடைய உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இந்த நிகழ்வு ஏப்ரல் 4, 2025 அன்று துல்ஹிரியவில் உள்ள MAS Athenaவில் நடைபெற்ற MAS Eco Go Beyond நிலைத்தன்மைக் கல்வி நிகழ்ச்சி 2024 விருது வழங்கும் நிகழ்வில் இடம்பெற்றது.
இளைஞர்களின் சிறந்த நிலைத்தன்மை சாதனைகளை கொண்டாடிய இந்த நிகழ்வில், சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் (IWMI) தலைவி பிரியானி அமரசிங்க மற்றும் GEF Small Grants Programme இன் தேசிய வழிகாட்டு குழுத் தலைவர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றனர். கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் MAS நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஓராண்டு நீண்ட பயணத்தின் உச்சக்கட்டமாக இந்த விருது வழங்கும் நிகழ்வு அமைந்தது. இந்தப் பயணத்தில் பட்டறைகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் மாணவர்களின் தலைமையிலான நிலைத்தன்மை முயற்சிகள் என்பன அடங்கியிருந்தன. இவை உள்ளூர் சமூகங்களில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டவை.
MAS Holdings நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பித்த Eco Go Beyond (EGB) திட்டம் இந்த ஆண்டு 18வது ஆண்டு நிறைவைக் கண்டுள்ளது. இத்திட்டம் நிலையான வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதுடன், மாணவர்களின் தலைமையிலான காலநிலை செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு அடிமட்ட முயற்சியாக இருந்த இத்திட்டம், இன்று இலங்கையிலுள்ள 149 பாடசாலைகளுக்கு விரிவாகியுள்ளது. இதுவரை 177,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கட்டமைக்கப்பட்ட நிலைத்தன்மைக் கல்வியை வழங்கியுள்ளது. இத்திட்டம் MASஇன் பரந்த அளவிலான நிலைத்தன்மை உத்தியான ‘MAS Plan for Change உடன் இணைந்து செயல்படுகிறது. இளம் சுற்றுச்சூழல் ஆலோசகர்களின் ஒரு தலைமுறையை வளர்க்கும் நோக்கம் இத்திட்டத்திற்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய MAS Holdingsஇன் குழு நிலைத்தன்மை வணிக பணிப்பாளர் நேமந்தி கூராகமகே Youth-Driven காலநிலை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “இன்று, நிலைத்தன்மைப் பண்பாட்டை வளர்ப்பதற்காக ஒன்றிணைந்து பணியாற்றிய ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மிக முக்கியமாக மாணவர்களை நாம் வரவேற்கிறோம். கடந்த ஒரு ஆண்டு மாத்திரம், சமூகங்களை கடுமையாக பாதிக்கும் கணிக்க முடியாத வானிலை மாற்றங்களை நாங்கள் கண்டுள்ளோம். காலநிலை மாற்றம் தீவிரமடையும் போது, அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது. Eco Go Beyond திட்டம் இளம் மாற்றம் உருவாக்குபவர்களுக்கு உண்மையான உலக சவால்களுக்கான தீர்வுகளை உருவாக்குவதற்கும், இந்த சவால்களை ஏற்கவும் குறைக்கவும் தேவையான அறிவையும் கருவிகளையும் வழங்குகிறது.” என தெரிவித்தார்.
மாற்றத்தை உருவாக்கும் அடுத்த தலைமுறையை அங்கீகரித்தல்
இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் பாதுகாப்பு, மரங்கள் நடுதல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் அவர்களின் புத்தாக்கமான அணுகுமுறைகளால் தனித்துவமாக சிறந்து விளங்கினர். உடுவ கனிஷ்ட வித்தியாலயத்தின் 9ம் வகுப்பு மாணவி டி. எம். ரஷ்மிலா லசங்கி, அருகியுள்ள 72 தாவர இனங்களை கண்டறிந்து, 190 அரிய தாவரங்களை பள்ளியின் அர்ப்பணிக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலத்தில் நடுவதற்காகவும், இந்த தாவரங்கள் பற்றிய அறிவை சமூகத்துடன் பகிர்ந்துகொள்வதற்காக QR குறியீடு அமைப்பை நிறுவியதற்காகவும் முதல் இடத்தைப் பிடித்தார். அவரது முயற்சி பாடசாலை எல்லைகளை தாண்டி, 20,010 மரங்களை மீண்டும் நடுவதற்கும் 2975 ஊடுருவும் தாவரங்களை அகற்றுவதற்கும் வழிவகுத்தது.
மேலும், பெல்லானா தேசிய பாடசாலையின் 10ம் வகுப்பு மாணவன் ஹஷின் லக்ஷன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பஹியங்கலா பாறை குகை அருகே வெற்று நிலத்தை மீட்டெடுத்தல், கல்கமுவவில் ரயில் பாதைகளில் யானை மோதல் விபத்துகளைத் தடுத்தல், மாதுறு கங்கையின் கரை அரிப்பை மரங்கள் நடுவதன் மூலம் எதிர்த்தல், மற்றும் அழிந்து வரும் செம்பட்டியல் தாவர இனங்களை திசு வளர்ப்பு தொழில்நுட்பம் மூலம் பெருக்குதல் போன்ற பாதுகாப்பு மற்றும் மரங்கள் நடும் பணிகளுக்காக இவர் விருது பெற்றார். இவரது தலைமையில் 45,000 மரங்கள் நடப்பட்டதுடன், அழியும் தறுவாயிலுள்ள Vesak Orchid இனமும் பாதுகாக்கப்பட்டது.
அதேபோல், ஸ்ரீ ஞானோதய மத்திய கல்லூரியின் 10ம் வகுப்பு மாணவர் அசிந்து நவோத்யா கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தினார். கற்பிட்டி பகுதியில் 10,000 கண்டல் மரக் கன்றுகள் உட்பட 76,629 மரங்களை நட்டுள்ளார். மேலும், சமூகத்திற்குள் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நிலையான பாடசாலைத் தோட்டங்களை உருவாக்கியுள்ளார்.
“Eco Go Beyond திட்டம், நீடித்த மாற்றத்தை ஏற்படுத்த அரச–தனியார் கூட்டு செயல்பாட்டின் சக்தியை வெளிப்படுத்துகிறது“ என MAS Holdings இன் சமூக நிலைத்தன்மைத் தலைவர் அமாந்தி பெரேரா கூறினார். “இந்த ஆண்டு, UNESCO உடனான எங்கள் கூட்டணி மூலம், இலங்கையில் UNESCOவின் பசுமைப் புள்ளி தர அளவுகோல்களை அமுல்படுத்துவதன் மூலம் இதன் தாக்கத்தை விரிவாக்குகிறோம். உலகளாவிய சிறந்த நடைமுறைகளை உள்ளூர் நிபுணத்துவத்துடன் இணைப்பதன் மூலம், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் எந்த பாடசாலையும் பின்தங்காத வகையில் ஒரு நிலைத்தன்மைக் கல்வி மாதிரியை நாங்கள் உருவாக்குகிறோம்.”
MAS Holdings மற்றும் அதன் கூட்டாளிகளின் ஆதரவுடன், Eco Go Beyond திட்டம் இளம் தலைவர்களின் ஒரு தலைமுறையை வளர்த்தெடுப்பதைத் தொடர்கிறது. இத்தலைவர்கள் காலநிலை நெருக்கடிக்கு மட்டுமே பதிலளிப்பதில்லை, மாறாக புத்தாக்கமான முறைகளிலும் Community-Driven செயல்பாடுகளின் மூலமும் நிலைத்தன்மையின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றனர்.