இந்தியாவின் 19 வயதுக்குட்டோர் அணியின் முன்னாள் தலைவராக செயற்பட்ட கிரிக்கெட் வீரர் அவி பரோட் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அவர் மரணித்துள்ளார்.
இளம் வயதில் தந்தையை இழந்த அவி பரோட், தமது தாய் மற்றும் மனைவியுடன் வசித்துவந்திருந்தார்.
அவரது மனைவி தற்போது 4 மாத கர்ப்பிணியாகவுள்ளதாகவும் இது அவி பரோட் தம்பதியின் முதல் குழந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின், சௌராஷ்ட்ரா கிரிக்கெட் கழகத்தினூடாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த அவி, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய உள்ளூர் அணிகளுக்காக விளையாடியுள்ளதுடன், 2011 ஆம் ஆண்டில் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.
விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான அவி பரோட், 38 முதற்தர போட்டிகளிலும், 20 உள்ளூர் இருபதுக்கு20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். துடுப்பாட்டத்தில் முதற்தர போட்டிகளில், 1,547 ஓட்டங்களையும். இருபதுக்கு20 போட்டிகளில் 717 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.