இலங்கையில் இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 55 பேர் உயிரிழந்துள்ளனர் என குடும்ப சுகாதாரப் பிரிவின் பணிப்பாளரும் சமூக மருத்துவ நிபுணருமான வைத்தியர் சித்ரமாலி டீ சில்வா தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் இதுவரை 90 சதவீதமான கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது என்றார்.
இதுவரை 55 கர்ப்பிணிகள் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ள நிலையில், அனைத்து மரணங்களும் இந்த வருடம் மே மாதத்தின் பின்னரே இடம்பெற்றுள்ள என்றார். அத்துடன் இவ்வாறு உயிரிழந்த அனைத்து கர்ப்பிணிகளும் எவ்வித தடுப்பூசியையும்
பெறாதவர்கள் என்பதுடன், வரலாற்றின் முதற்தடவை அதிகளவு கர்ப்பிணிகள்
உயிரிழந்துள்ளனர் என்றார்.
மேலும் சிறுவர்களுக்கு கொரோனா ஒழிப்பு தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் தொற்றா நோய் தொடர்பான குழு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதுடன், சிறுவர்களிடையே
தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்கள் குறித்து ஆராய்ந்த போது, பல நாள் நோய்
வாய்ப்பட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமையவே பல்வேறு நோய்தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்த தீர்மானித்தோம் என்றார்.