பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து என்பவற்றின் விலையை அதிகரிப்பு தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விலை அதிகரிப்பு தொடர்பிலான யோசனை, நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில் கூடிய வாழ்க்கை செலவுக் குழுவிடம் முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாயாலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாயாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாயாலும் அதிகரிக்க வாழ்க்கை செலவுக் குழு யோசனை முன்வைத்துள்ளது.
மேலும், சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாயால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி முடிவு இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காணொளி ஊடாக அமைச்சரவை கூட்டம் இன்று (27) பிற்பகல் இடம்பெறவுள்ளது.