கடந்த 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய இரு சிறைக்கைதிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்பரீட்சைக்கு, கொழும்பு மெகசின் மற்றும் வட்டரெக்க சிறைச்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையங்களில், குறித்த இரு சிறைச்சாலைகளிலும் இருந்து 4 கைதிகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இவர்களில் மெகசின் சிறைச்சாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரும், மற்றுமொரு கைதியும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையிலுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை நற்பிரஜைகளாக்கி சமூகத்துக்கு விடுவிப்பது சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கியமான கடமைகளில் பிரதானமானதாகும்.
அதற்கமைய, சிறைக்கைதிகளின் திறமைகளை கண்டறிந்து அதனை மேம்படுத்த சிறைச்சாலைகளினுள் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலையின் வளங்களைக்கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி சிறைச்சாலை திணைக்களம் மற்றும் பரீட்சை திணைக்களம் என்பன இணைந்து, அங்குள்ள கைதிகளில் நன்நடத்தைகளை கொண்டுள்ள, புனர்வாழ்வளிக்கப்படக் கூடியவர்களுக்கு உயர்கல்வி செயற்பாடுகளில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படுவதுடன், சிறைச்சாலை வளாகத்திலேயே அவர்களுக்கான பரீட்சை நிலையங்களும் அமைத்துக்கொடுக்கப்படுகின்றன.
இவ்வாறு உயர்கல்வியை நிறைவுசெய்த கைதிகளில் சிலர் பட்டப்படிப்பை பூர்த்திசெய்துள்ளதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.