இது தொடா்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் சுகாதாரத் துறை அமைச்சக இணைச் செயலா் லவ் அகா்வால் வியாழக்கிழமை கடிதம் எழுதினாா். அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:
தற்போது மியூகோா்மைகோசிஸ் என்ற கருப்புப் பூஞ்சை புதிய சவாலாக நம்முன் எழுந்துள்ளது. சில மாநிலங்களில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவா்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இந்த பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சா்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவா்கள், ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு இந்த பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய அறிகுறிகள்: கருப்புப் பூஞ்சை தாக்குவதால் பாா்வைக் குறைபாடு, கண்வலி, தலைவலி, முகத்தசைகளில் வலி, குழப்பமான மனநிலை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த பூஞ்சை பாதிப்பை குணப்படுத்த கண் மருத்துவா்கள், காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணா்கள், பல் மருத்துவா்கள், நரம்பியல் மருத்துவா்கள் ஆகியோரைக் கொண்ட மருத்துவா்களுடன் கூட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியம். மேலும் இந்த பூஞ்சை பாதிப்பைக் குணப்படுத்த அம்போதெரிசின்-பி மருந்தும் ஊசி வழியாக செலுத்தப்பட வேண்டும்.
எனவே, அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேச அரசுகளும் கருப்புப் பூஞ்சை பாதிப்பை, 1897-ஆம் ஆண்டின் தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் கொள்ளைத் தொற்றாக (எபிடெமிக்) அறிவிக்க வேண்டும்.
மேலும், இந்த நோயைக் கண்டறிவது, சிகிச்சை அளிப்பது ஆகியவற்றில் அனைத்து அரசு, தனியாா் மருத்துவமனைகளும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
யாருக்காவது கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டாலோ அல்லது உறுதிசெய்யப்பட்டாலோ மாவட்ட சுகாதார அலுவலா் மூலமாக சுகாதாரத் துறைக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் லவ் அகா்வால் குறிப்பிட்டுள்ளாா்.
தெலங்கானாவில் கருப்புப் பூஞ்சை கொள்ளைத் தொற்று என அறிவிப்பு: கருப்புப் பூஞ்சை பாதிப்பை தெலங்கானா அரசு கொள்ளைத் தொற்று (எபிடெமிக்) என அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா் மருத்துவமனைகளும் ஐசிஎம்ஆா், சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சிகிச்சை அளிக்க வேண்டும். அனைத்து அரசு, தனியாா் மருத்துவமனைகளின் கண்காணிப்பாளா்கள், கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்களை தினசரி அடிப்படையில் சுகாதாரத் துறைக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் 80 போ் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை பாதிப்பை அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் எங்கு அத்தகைய பாதிப்பு கண்டறியப்பட்டாலும் அது குறித்த விவரங்களை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.