நாட்டில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 06ஆக அதிகரித்துள்ளது.
மரங்கள் சரிந்து வீழ்ந்தமை மற்றும் கடும் மழை காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இந்த சீரற்ற வானிலையினால் 9688 குடும்பங்களைச் சேர்ந்த 35,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
34 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர், 4 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள அதேவேளை, 1246 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், நாட்டை சூழவுள்ள கடல் கடும் சீற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலுள்ள மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நாளை (25) அதிகாலை 5.30 மணிக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, வடக்கு நோக்கி நகர்ந்து நாளை இரவு 11.30 மணியளவில் இந்த புயல் மேலும் வலுவாடையும் என திணைக்களம் குறிப்பிடுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, கடற்பரப்புகளும் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.