இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (19) இடம்பெற்றதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருடன்; இந்து மத மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசகர் நா. சிவானந்தராஜா, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சரின் இந்து மத இணைப்புச் செயலாளர் பாலஸ்ரீதரன், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் சுலோக்சன் உள்ளிட்ட ஆலோசனைக் குழுவினரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
ஐயப்ப யாத்திரிகளுக்கான காப்புறுதி தொடர்பாக நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைகள் மற்றும் கேள்விகளுக்குத் தீர்வு காணும் விதமாக, நல்ல அணுகுமுறையுடன் கூடிய புதிய திட்டத்தை எவ்வாறு ஆரம்பிக்கலாம் என்பது குறித்து சாதகமான முறையில் ஆலோசிக்கப்பட்டதாகப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறினார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து மத மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இக்கலந்துரையாடலின் போது, யாத்திரிகர்களுக்கான காப்புறுதித் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை உடனடியாக முன்வைக்குமாறும், அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக அறிவிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் ஊடாகச் செய்ய வேண்டிய அனைத்து விடயங்களையும் முன்னெடுக்க அமைச்சர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், சம்பந்தப்பட்ட உதவிகளை வழங்கப் புத்தசாசன அமைச்சு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், யாத்திரிகர்களுக்கு எவ்வித இடஞ்சல்களும் சிக்கல்களும் ஏற்படாத வகையில் யாத்திரையை மேலும் இலகுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஐயப்ப பக்தர்களுக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நம்பிக்கை வெளியிட்டார்.


