தரமற்ற எவ்வித எரிபொருள் இருப்புக்களையும் இலங்கையில் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.
இன்று (17) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி, கொலன்னாவை மற்றும் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளுக்கு எரிபொருளை இறக்குவதற்கு உரிய முறைப்படி அந்தந்த எரிபொருள் நிறுவனங்கள் செயற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
எரிபொருளின் தரத்திற்கு இணங்குவது தொடர்பில் அமைச்சு என்ற ரீதியில் பொறுப்பேற்பதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தரக்குறைவான எரிபொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அனைத்தும் பொய்யானவை என அமைச்சர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
எரிபொருளின் தரத்தில் பிரச்சினை இல்லை எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்தும் வார்த்தைகளில்தான் பிரச்சினை உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் கருத்துக்கு பின்னர் மீண்டும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருளின் ஒரு பகுதி தரம் குறைந்த எரிபொருள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும், இறுதியாக தனது கருத்தை வெளிப்படுத்திய அமைச்சர், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவோ அல்லது களஞ்சிய நிலையத்தின் ஊடாகவோ இலங்கைக்கு தரக்குறைவான எரிபொருள் கொண்டு வரப்படவில்லை எனத் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை விடுத்து சந்தேகம் இருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவரிடம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, சம்பந்தப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தொடர்பான ஆய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் ஹன்சார்ட் செய்யப்பட வேண்டும் என்றார்.