” இது இலங்கை, சிங்கள, பௌத்தர்களின் நாடாகும் என்பதையும், இலங்கை என்பது பாலஸ்தீனம் அல்ல என்பதை இங்குள்ள சில அடிப்படைவாத முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும், முடியாவிட்டால் பாலஸ்தீனம் சென்று குடியேறலாம்.”
இவ்வாறு தன்னை சமூக செயற்பாட்டாளர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் கடும்போக்கு சிங்கள தேசியவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்படும் டான் பிரசாத் தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கிடையில் நடைபெறும் போரை இலங்கை விவகாரமாக மாற்றிக்கொள்ளகூடாது. ஆனால் எங்கேயோ போகும் பாம்பை பிடித்து, சாரத்துக்குள் போட்டும் கொள்ளும் வகையில் இது விடயத்தில் இங்கு சில தரப்புகள் செயற்படுகின்றன.
குறிப்பாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர், மேலும் சில சிங்கள அமைப்புகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன. அந்த இரு நாட்டு பிரச்சினை எமக்கு தேவை இல்லை. எங்கேயோ எரியப்படும் ராக்கெட் தாக்குதலை எமது நாட்டு பக்கம் திருப்பும் வகையில் செயற்பட வேண்டாம். ‘கெட்டபோல்’ வாங்குவதற்குகூட எமது நாட்டில் பணம் இல்லை.
இலங்கை என்பது பாலஸ்தீனம் அல்ல , இலங்கைக்கு இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர், இங்கு தங்கி இருக்கின்றனர், அதன்மூலம் அந்நிய செலாவணி கிடைக்கின்றது, எனவே, இங்கு வரும் இஸ்ரேலியர்களை விரட்டுவதற்கான உரிமை முஸ்லிம்களுக்கு இல்லை என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன். இதனை ஏற்று செயற்பட முடியாத முஸ்லிம்கள் இலங்கையில் இருந்தால் அவர்கள் பாலஸ்தீனத்துக்கு செல்லலாம். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டால் நாமும் வீதிக்கு இறங்க வேண்டிவரும்.
இஸ்ரேல் என ஒரு நாடே இருக்கவில்லை எனக் கூறுபவர்கள், நாளை இலங்கை என ஒரு நாடு இருக்கவில்லை, அது அரபு நாடு என்றுகூட கூறலாம். இது சிங்கள, பௌத்தர்களின் நாடாகும்.” – என்றார்.