லத்தீப் பாரூக்
- “ஏதோ ஒரு வகையில் ஒரு தடவை நீங்கள் பலியாக்கப்பட்டீர்கள் என்பதற்காக இன்னொரு தரப்பை எப்போதுமே பலிக்கடாவாக்க முடியாது, எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு” எட்வர்ட் என்ற ஒரு அறிஞர் சொன்னது
- “அநாகரிகமான கொடுமைகளை இன்னும் எவ்வளவு காலம் தான் இந்த உலகம் தாங்கிக் கொள்ளும்” பேர்ட்ரண்ட ரஸல்
- “நம் அனைவருக்குள்ளும் குடிகொண்டுள்ள ஒரு பலஸ்தீன தேசம் உள்ளது. அது விடுவிக்கப்படவேண்டிய பலஸ்தீனம். அது இன மத பேதங்களின்றி எல்லோரும் இணைந்து சமத்துவத்துடன் வாழும் பலஸ்தீனம்” றெபாத் அலாரீர்
- “ஆக்கிரமிப்பு என்பது உங்கள் வாழ்க்கையை நீங்கள் இராணுவ சட்டங்களின்; கீழ் வாழ்வது, தொடர்ச்சியான மரண அச்சுறுத்தலுடன் வாழ்வது, குறிபார்த்து சுடும் ஒரு துப்பாக்கி நபரின் தோட்டாவில் இருந்து அல்லது ஒரு ஆ16 ஆயுதத்தில் இருந்து வெளிப்படும் தோட்டாவி;ல் இருந்து கிடைக்கும் விரைவான மரணத்தை எதிர்நோக்கி வாழ்வது” சுஹேர் ஹம்மாத்
1948ல் பலஸ்தீன பூமியில் இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்ட பின் முதல் தடவையாக காஸா பிரதேசத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள ஹமாஸ் ஆயுத குழு 2023 அக்டோபர் 7ம் திகதி சனிக்கிழமை முற்றிலும் எதிர்பாராத வகையில், முன்னொருபோதும் இல்லாத வகையில், ஆச்சரியமூட்டும் விதத்தில் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டது. 1973ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி எகிப்திய இராணுவம் முற்றிலும் எதிர்பாராத வகையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சினாய் பகுதியில் பிரவேசித்ததை நினைவு கூறுவது போல் ஹமாஸின் இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது.
இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்கான ரொக்கெட்டுக்களை ஏவிய ஹமாஸ் அதனோடு இணைந்ததாக மிகக் கடுமையான விதத்தில் இஸ்ரேலால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளையும் பல முனைகளுடாக ஊடறுத்து இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். ஒரு நீண்ட விடுமுறை காலப்பகுதியைப் பயன்படுத்தி ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுறுவி, இஸ்ரேலை மட்டும் அல்ல அதன் பிரதான பாதுகாவலனான அமெரிக்கா மற்றும் குற்றங்களில் அதன் பங்காளிகளான அரபுலக ஆட்சியாளர்களையும் திகைப்படையச் செய்துள்ளது.
ஒரு சில மணிநேரத்தில் இஸ்ரேலிய படைவீரர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். போராட்டக் குழுவினரால் பலர் கடத்தப்பட்டனர். அவர்களுள் பலர் இஸ்ரேலிய ஆயுதப் படை வீரர்களும் படை பிரிவுகளின் கட்டளையிடும் அதிகாரிகளும் ஆவர். குறுகிய காலப்பகுதிக்குள் காஸா எல்லைப் பகுதி ஊடாக இஸ்ரேலிய தடைகளை உடைத்துக் கொண்டு பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலிய நகரங்களையும் குடியிருப்புக்களையும் நோக்கி முன்னேறும் விடியோ காட்சிகள் பல சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பலஸ்தீன ஆயுதபாணிகள் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட கார்கள் மற்றும் வாகனங்களில் காஸாவை அண்டிய இஸ்Nரின் முக்கிய புறநகர் பகுதிகளில் காவலில் ஈடுபட்டிருக்கும் காட்சிகளும் வெளியாகின. இராணுவ முகாம்கள் சிலவும் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருக்கும் காட்சிகள் வெளியாகின. இஸ்ரேல் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் பதிலடி கொடுப்பதற்கான கால அவகாசத்தைக் கூட வழங்காமல் அவர்கள் பல இலக்குகளை நோக்கி முன்னேறினர்.
காஸாவின் தெற்கில் உள்ள கான்யூனுஸ் பகுதியில் பாதகாப்பு வேலியை தகர்த்துக் கொண்டு பலஸ்தீன போராளிகள் முன்னேறிச் செல்லும் காட்சி. 2023 அக்டோபர் 7ல் எடுக்கப்பட்ட படம். படஉதவி ஏஎப்பி
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேலுக்கு எதிராக விரிவானதோர் யுத்தத்தை தாங்கள் தொடங்கி உள்ளதாக ஹமாஸ் இயக்க இராணுவ பிரிவின் பிரதான கட்டளையிடும் அதிகாரி முஹம்மத் அல் தெயிப் தாக்குதல் தொடங்கப்பட்ட அன்று காலை ஏழு மணிக்கு ஒரு குரல் பதிவை வெளியிட்டிருந்தார். “அல் அக்ஸா வெள்ளம்” என்ற பெயரில் நாம் ஒரு தாக்குதலை ஆரம்பித்துள்ளோம் என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறேன். எமது முதலாவது தாக்குதல் இலக்கு எமது எதிரிகளின் இராணுவ வளங்கள், விமான நிலையங்கள் என்பனவாகும். முதல் இருபது நிமிடங்களில் ஐயாயிரத்துக்கும் அதிகமான ரொக்கெட்டுக்கள் மற்றும் ஷெல்களை நாம் அவர்களை நோக்கி ஏவி உள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பலஸ்தீள சிறைக் கைதிகளை இஸ்ரேல் நடத்துகின்ற விதம், அல் அக்ஸா புனித பள்ளிவாசல் வளாகத்தின் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் அத்துமீறல்கள், தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள், யூதர்களின் தற்போதைய விடுமுறை காலத்தை பயன்படுத்தி பெருமளவான சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் அல் அக்ஸா வளாகத்துக்குள் அத்துமீறி வருகின்றமை என்பனவற்றுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே நாம் எமது தாக்குதலைத் தொடங்கி உள்ளோம் என்று அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிhப்பு படைகள் மேற்குக் கரையில் உள்ள எமது நகரங்களில் அன்றாடம் ஊடுறுவி வருகின்றனர். எமது மக்கள் வீடுகளில் தங்கி இருக்கின்ற நிலையிலேயே அந்த வீடுகளை அவர்கள் தகர்த்து வருகின்றனர். எமது மக்களைக் கொன்று அவர்களது சொத்தக்களை தரைமட்டமாக்கி வருகின்றனர். பலரை கைது செய்து இழுத்துச் செல்கின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டும் காயம் அடைந்தும் உள்ளனர். எமது மக்களை அவர்களின் சொந்த இடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி அவற்றை கைப்பற்றி சட்ட விரோதமான யூத குடியேற்றங்களை நிறுவி வருகின்றனர். குற்றவாளிகளான இஸ்ரேலின் முற்றுகை காஸாவில் இன்னமும் தொடருகின்றது என்று அந்தப் பதிவில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் எல்லா குற்றங்களுக்கும் வன்முறைகளுக்கும் நடுவே, அமெரிக்காவினதும் ஏனைய மேற்குலக நாடுகளினதும் பூரண அதரவுடன் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக அவர்கள் மீறி வருகின்ற நிலையில், இவற்றை எல்லாம் கண்டும் காணாமல் சர்வதேச சமூகம் மௌனம் காத்த நிலையில் எமது விவகாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க நாமே தீர்மானித்து விட்டோம். விடுபாட்டு உரிமையோடு அவர்கள் இழைத்து வந்த வன்முறைகள் அட்டூழியங்கள் அநியாயங்கள் என்பனவற்றுக்கு இனி இடம் கிடையாது என்பதை எமது எதிரிகள் இனிமேல் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் இயக்க இராணுவ பிரிவின் பிரதான கட்டளையிடும் அதிகாரி முஹம்மத் அல் தெயிப் தெரிவித்துள்ளார்.
2023 அக்டோபர் 7ல் காஸாவின் தென் பகுதியில் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலிடம் இருந்து கைப்பற்றிய ஒரு இராணுவ வாகனத்தில் காணப்படுகின்றனர்
இது இஸ்ரேல் முன்னர் ஒருபோதும் சந்திக்காத பேரழிவு. இஸ்ரேலும் மத்திய கிழக்கும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை என்று இஸ்ரேல் பத்தி எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இதுவரை புரிந்துள்ள யுத்தக் குற்றங்கள் எதையுமே கண்டு கொள்ளாமல், பலஸ்தீன மக்களுக்கு எதிரான அவர்களின் அடக்குமுறைகள் மற்றும் கொடூரங்கள் என எதையுமே பொருட்படுத்தாமல் இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரித்து வருகின்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்ற நிலைப்பாட்டில் தான் இன்றும் உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஒரு படி மேலே சென்று ஒரு கற்பாரையின் உறுதியைப் போல் இஸ்ரேலை நாம் ஆதரிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி இஸ்ரேலை காப்பாற்றுவதற்காக தனது மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பல் ஒன்றையும் உடனடியாக அனுப்பி வைத்துள்ள ஜோ பைடன் தேவையான ஆயுதங்களையும் அனுப்பி உள்ளார்.
இதே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் தான் மனித உரிமைகள், சுதந்திரம், மனித விழுமியங்கள் என்பன பற்றி வாய் கிழிய பேசிக் கொண்டும் இருக்கின்றார்கள். ஆனால் முஸ்லிம் நாடுகள் பலிபீடங்களாக மாற்றப் படுவதைப் பற்றி அவர்கள் வாய் திறப்பதே இல்லை. மேற்குலகின் இவ்வாறான கொடிய, தீய, பாரபட்சம் மிக்க மனநிலையின் கீழ் இஸ்ரேல் கடந்த சுமார் நூறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் முடிவற்ற காட்டுமிராண்டித்தனம், அடக்குமுறை, அட்டூழியம் மற்றும் கொடுமைகளின் நடுவே எவ்வாறு சமாதானத்தை தேட முடியும் என்பதே முக்கியமான கேள்வியாகும்.
அதேவேளை எதிர்பார்த்த படியே இஸ்ரேல் ஹமாஸின் இராணுவத் தாக்குதலுக்கு மிகவும் மூர்க்கதனமாக பதில் அளித்துள்ளது. காஸா பிரதேசம் இப்போது மீண்டும் பலிபீடமாக மாற்றப்பட்டுள்ளது.
ஹமாஸின் இந்த இராணுவ தாக்குதல் பலஸ்தீன மக்களையும், அல்அக்ஸாவையும், இஸ்லாத்தையும் கைவிட்டு விட்டு வெட்கக் கேடான வித்தில் அதிகார போதையில் மூழ்கி தமது மேற்குலக எஜமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டு இஸ்ரேலுடன் கள்ளத் தொடர்புகளைக் கொண்டுள்ள அரபுலக சர்வாதிகாரிகளுக்கு ஒரு தெளிவான செய்தியையும் வழங்கி உள்ளது. இவர்களது அதிகாரத்தின் கீழ் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் பலஸ்தீன மக்கள் தமது விடுதலைக்காகவும் கௌரவத்துக்காகவும் நடத்தி வருகின்ற போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதும் இப்போது தெளிவாகி உள்ளது.
இந்தக் கட்டுரையை கடந்த வியாழக்கிழமை பிரசுரத்துக்காக அனுப்பத் தயாரான நிலையில் 1100 யூதர்கள் மரணம் அடைந்தும் 5339 பேர் காயம் அடைந்தும் உள்ளனர். பலஸ்தீன தரப்பில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆகவும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2800 ஆகவும் பதிவாகி உள்ளது.
பலஸ்தீன மக்களை ஆண் பெண் சிறுவர் முதியோர் என எந்தப் பேதமும் இன்றி வாட்டி வதைத்து கொன்றொழிக்கும் படலத்தை இப்போது இஸ்ரேல் தொடங்கி உள்ளது. உலகில் ஏனைய பாகங்களில் உள்ள முஸ்லிம்களும் பலஸ்தீனத்தை சுற்றி உள்ள முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் என்ன செய்து கொணடிருக்கின்றார்கள் என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.
காஸா என்பது பலஸ்தீனத்தின் மத்திய தரை கடல்கரையோரத்தை அண்டிய 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட ஒரு சிறிய நிலப்பரப்பாகும். இங்கு சுமார் 20 லட்சம் பலஸ்தீன மக்கள் வாழுகின்றனர். வாழுகின்றனர் என்று சொல்வதை விட அவர்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதே சரியாகும். இது தான் இன்று உலகிலேயே மிகவும் சனநெரிசல் மிக்க பிரதேசமாகும். இவர்களுள் அநோகமானவர்களுக்கு சொந்தமாக வீடுகளும் காணிகளும் இருக்கின்றன. அவை எல்லாமே இஸ்ரேல் என்ற இடத்துக்குள் இருக்கின்றன. பலஸ்தீன மக்களின் வீடுகளும், காணிகளும், கட்டிடங்களும, வாழ்வாதாரங்களும் ஏனைய சொத்துக்களும் உள்ளடங்கிய பகுதிதான் இன்று இஸ்ரேல் என்ற நாடாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில்; பலஸ்தீன மக்கள்; இந்த காஸா நிலப்பரப்புக்குள் அகதிகளாகவே வாழுகின்றனர். துப்பாக்கி முனையில் பலவந்தமாக தமது பூர்வீக பூமியில் இருந்து யூத பயங்கரவாத குழுக்களால் அடித்து விரட்டப்பட்டவர்கள் தான் இந்த மக்கள். உலகம் முழுவதும் அலைந்து திரிந்த யூதர்களை கூட்டம் கூட்டமாகக் கொண்டு வந்த பலஸ்தீன மக்களிடம் இருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட இடங்களில் 1948ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதிக்க அதிகாரத்தின் உதவியோடு குடியமர்த்தப்பட்டவர்கள் தான் இன்று அங்கு வாழும் யூதர்களும் அவர்கள் சொந்தம் கொண்டாடும் இஸ்ரேல் என்ற யூதர்களின் நாடும்.
1967ல் இஸ்ரேலின் அண்டைய அரபு நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு யுத்தத்தின போது காஸா இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் அந்த மக்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு அடக்குமுறைக்கும, அட்டுழியத்துக்கும், கொடுமைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். பலஸ்தீன மக்களில் தினசரி குறைந்த பட்சம் ஒருவராவது கொல்லப்பட்டனர், எந்தக் காரணமும் இன்றி கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவும் இன்றி சிறைகளில் அடைக்கப்பட்டனர். மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். அரசாங்க ஊழியர்கள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், சுகாதார பராமரிப்புத் துறை அதிகாரிகள், பொறியிலாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள்; என பல்வேறு துறை சார்ந்தவர்களை உள்ளடக்கியது தான் காஸாவில் வாழும் சமூகம்.
பலஸ்தீன போராளிகள் ஏற்கனவே 2005ல் ஒரு தாக்குதலை நடத்திய போது அதற்கு முகம் கொடுக்க முடியாமல் 38 வருடங்களின் பின் அன்று இஸ்ரேல் காஸாவில் இருந்து பின்வாங்கி றபா எல்லை பகுதியை ஒப்படைத்தது. காஸாவுக்கு வெளி உலகத் தொடர்புடைய ஒரே நுழைவாயில் இது மட்டுமே. அந்த தொடர்பு வழி எகிப்துடனானது. இந்த நுழைவாயில் பகுதியில் பலஸ்தீன காவலர்களுடன் ஐரோப்பிய யூனியன் கண்கானிப்பில் கடமையாற்றும் அதிகாரிகளும் கடமையில் உள்ளனர்.