கலவானை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (16) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.55 அளவில் இடம்பெற்றுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
கலவான தெல்கொட கொலனியைச் சேர்ந்த தம்வல லியனகே ரணில் பிரதீப் குமார என்ற (42) வயதுடைய திருமணமானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கலவான தெல்கொட பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலினால் ஒருவர் காயமடைந்து 1990 நோயாளர் காவுவண்டி மூலம் கலவானை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதுடன் மோதலில் தொடர்புடைய ஏனைய தரப்பினரும் சிகிச்சைக்காக கலவானை ஆதார வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.
அப்போது, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் முறுகல் நிலை ஏற்பட்டு உயிரிழந்த நபர் கத்தியை எடுத்து மற்றைய நபரை குத்த முற்பட்டதாகவும், அதன் போது உயிரிழந்த நபர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும் கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
மோதலில் இருந்து தப்பிக்க முயன்ற பெண் ஒருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திககுத்துக்கு இலக்கான நபர் வைத்தியசாலையின் ஆண்கள் விடுதி நோக்கி ஓடியதுடன், அவரை துரத்திச் சென்ற மற்றைய நபர் ஆண்களுக்கான பிரிவில் உயிரிழந்த நபரை கத்தியால் குத்தியதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.