வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
இதையடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவானது. இந்த புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு அதிதீவிர புயலாக வலுப்பெற்று வரும் ஞாயிற்றுக்கிழமை (14) மியான்மர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோக்கா புயலால் தமிழகத்திற்கு பாதிப்புகள் எதுவும் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட அகலாங்குகள் 03N இற்கும் 20N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 85E இற்கும் 100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் கடற்தொழிலாளர் சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.