நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் மிக நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வந்த இந்து மயான பிரச்சனைக்கான நிரந்த தீர்வினைப் பெற்றுத் தந்தமைக்காக அட்ப்பள்ளம் பிரதேச மக்கள் சார்பாக நன்றிகளை பகிர்ந்து கொள்வதாக கெளரவ பிரதேச சபை உறுப்பினர் திருமதி. கே.பி. சுதாமதி தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபையின் 60 ஆவது சபை அமர்வு இன்று (16) நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பட்டியல் வேட்பாளராக களமிறங்கிய போது எனக்கெதிரான பல மிரட்டல்கள், அச்சுருத்தல்களை நிகழ்ந்திருந்தன. இந்து மயான பிரச்சனையை தீர்ப்பதற்காகவே நாங்கள் ஒருவரை களமிறக்கியிருக்கின்றோம். பெண்ணாக இருந்து உன்னால் எதையும் சாதிக்க முடியாது என்றும் என்னை அச்சுருத்தியிருந்தார்கள்.
இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தவிசாளர் தாஹிரின் ஆலோசனைக்கமைவாக கெளரவ உறுப்பினராக பதவியேற்று குறுகிய காலத்திற்குள்ளேயே எனது பிரதேசத்தில் நெடு நாளாக கிடப்பில் கிடந்த இந்து மயான பிரச்சனைக்கான நிரந்தர தீர்வினை மிகவும் இலாவகமாக இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் பெற்றுத் தந்த தவிசாளர் தாஹிர், பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் அட்டப்பள்ளம் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதே போல அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை றிஷாத் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இருள் சூழ்ந்து கிடந்த அட்டப்பள்ளம் பிரதேசத்திற்கு தெருமின் விளக்குகள் பொருத்தப்பட்டு பிரகாசமான கிராமமாக ஆக்க முடிந்தமைக்காக கட்சியின் தலைமைக்கும் நன்றிகளை தெரித்துக் கொள்கின்றேன்.
அட்டப்பள்ளம் பிரதேச மக்களின் கல்வி அபிவிருத்தியில் கரிசனை கொண்டு எமது பிராந்தியத்தில் எங்குமில்லாதவாறு மிகவும் அழகிய, சகல வசதிகளையும் கொண்ட பொது நூலகமொன்றை அமைத்து தந்து பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பிரயோசனமடைவதற்கு வாய்ப்பேற்படுத்தி தந்தமைக்காவும் தவிசாளர் தாஹிர் அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த பிரதேச சபை ஆட்சியின் போது பெண் உறுப்பினராக சபைக்கு சென்று எதை செய்ய முடியுமென்ற சந்தேகத்தில் இருந்த எனக்கு எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி, இன மத வேறுபாடுளுமின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் வழங்கி எனது வட்டாரத்திற்குள் என்னால் முடியுமான சேவைகளை செய்ய வழிகாட்டி ஒத்துளைப்பு வழங்கிய கெளரவ தவிசாளர், கெளரவ செயலாளர், கெளரவ உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் அட்டப்பள்ளம் பிரதேச மக்கள் சார்பாகவும் தனது உள்ளார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.