பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
பிபிசி அலுவலகங்களில் “சர்வே” நடத்தியிருப்பது “பழிவாங்கும் நடவடிக்கை” என்றும் “ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல்” என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளதை அச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மோதி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
விமர்சனக் குரல்களை நெரிப்பதற்காக வெட்கக்கேடான மற்றும் மன்னிக்க முடியாத பழிவாங்கலுடன் இது செய்யப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களை தாக்க அமைப்புகளைப் பயன்படுத்தினால் எந்த ஜனநாயகமும் வாழ முடியாது.
மக்கள் இதை எதிர்ப்பார்கள்” என தெரிவித்துள்ளது அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங், “மோதி சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதாக” தெரிவித்திருப்பதும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “முதலில் பிபிசி ஆவணப்படங்களுக்குத் தடை. அதானி நிறுவன முறைகேடுகளுக்கு விசாரணை இல்லை. தற்போது பிபிசி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை. இந்தியா: ஜனநாயகத்தின் தாய்தானா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளது அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002 குஜராத் கலவரம் குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியான சில வாரங்களில் பிபிசி அலுவலகங்களில் இந்த ‘சர்வே’ மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்படும் என்று தொடர்ந்து நம்புவதாகவும் பிபிசி வெளியிட்ட அறிக்கையும் அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.
யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றும், இந்த ‘சர்வே’ முடிந்தபிறகு அதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படும் எனவும், இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.