கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த ரஷ்ய தம்பதியரின் பயணப் பொதியில் துப்பாக்கி போன்ற இரண்டு சாதனங்களை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் ரஷ்யா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள்,33 வயதான இந்த ரஷ்ய பிரஜை, அவரது 26 வயதுடைய ரஷ்ய மனைவி மற்றும் 09 வயதான மகன் ஆகியோர் ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தி்றகு வருகைத்தந்தனர்.
கொழும்பு-05 பகுதியில் வசிக்கும் இவர்கள் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் பிரவேசித்த போது, விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட ஸ்கேன் சோதனையில் அவர்களின் பயணப் பொதிகளில் கைத்துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கைத்துப்பாக்கிகளில் தோட்டாக்களை வெளியிடும் பகுதி இல்லை எனவும், ஆனால் தோட்டாக்கள் செல்லும் குழாய் இரும்பினால் செய்யப்பட்டமை சந்தேகத்திற்குரியது. அந்தவகையில், இந்தக் கைத்துப்பாக்கிகளை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு களப் படைத் தலைமையகத்தில் சமர்ப்பிக்க கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.