நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தேசிய மின்கட்டமைப்பில் 270 மெகாவோட் மின்சாரம் இல்லாது போனது.
அதனை ஈடுசெய்வதற்கு களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் மற்றும் எம்பிலிபிட்டி ஏஸ் தனியார் மின் உற்பத்தி நிலையம் என்பவற்றிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு உலை எண்ணெய் பெறப்பட்டதன் மூலம் 170 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எம்பிலிபிட்டிய ஏஸ் தனியார் மின் நிலையத்திலிருந்து 100 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளது.
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறுவதற்கான அனுமதியை மின்சார சபைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று வழங்கியது.
அடுத்த சில நாட்களில் அதிக காலம் மின் துண்டிப்பு இன்றி மின் கட்டமைப்பை பராமரிக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை, தற்போது செயலிழந்துள்ள இரண்டாவது அலகை ஒக்டோபர் முதலாம் திகதி தேசிய கட்டமைப்பில் இணைக்கவும், மூன்றாவது அலகை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தேசிய கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளவும் முடியும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.