நுவரெலியாவில் கடந்த 3ஆம் திகதி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று நுவரெலியா கிறகறி வாவிக்குச் செல்லும் பீதுருதாலகால மலை நீரோடையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சசிதரன் (வயது 20 )என்றஇளைஞன் கடந்த 3 ஆம் திகதி மாலை நுவரெலியா நகருக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பாமல் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இளைஞனின் பெற்றோர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த 12 நாட்களாக நுவரெலியா பொலிஸார் இராணுவத்தினர் மற்றும் பெற்றோர்கள் உறவினர்கள் பம்பரகலை தோட்ட மக்கள் இணைந்து தேடப்பட்டுவந்த நிலையில் இன்று நீரோடையில் சடலமாக நுவரெலியா பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த நுவரெலியா பதில் நீதவான் டினிட்டி ராயன் பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும்படி உத்ததரவு பிறப்பித்தார். இதன்படி இன்று மாலை4-45 மணியளவில் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டது.
குறித்த சடலமானது உருக்குலைந்த நிலையில் காணப்படுவதோடு, இளைஞன் கொலை செய்யப்படானா? அல்லது இயற்கை இறப்பா? என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.