எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் 80 வீதமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன என அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் 50 சதவீத சிற்றுண்டிசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் நெருக்கடி தொடர்ந்தால் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களும் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உணவு மளிகைப் பொருட்களின் விலைவாசி உயர்வால், ஹோட்டல் மற்றும் உணவகங்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும், சாப்பாடு வாங்க உணவகங்களுக்கு வருபவர்கள் அதன் விலையை கேட்டுவிட்டு ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீரை குடித்து விட்டு செல்கின்றனர். உணவுக்காக ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாகவும் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான பொருட்கள் விநியோகம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக கூறும் அவர், தற்போதைய சூழ்நிலையில் ஹோட்டல் பணியாளர்கள் பலர் வேலையை விட்டுவிட்டு கூலி வேலைக்குச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.