எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தற்போதைய நிர்வாகம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அதிக எரிபொருள் இருப்புகளைக் கொள்வனவு செய்வதற்குப் பதிலாக விநியோக பொறிமுறையைத் தீர்க்க அரசாங்கம் முயற்சிப்பதாக கட்சியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வாகன உரிமையாளர்களை பதிவு செய்வதாக முதலில் அரசாங்கம் அறிவித்ததாகவும், பின்னர் விநியோகப் பொறிமுறையை சீரமைக்க ஒரு செயலியைக் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அது நிறைவேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்போது அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளைக் குறைக்க டோக்கன் முறையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கத்தின் பதில் டோக்கன் முறைமையாக இருப்பது நகைச்சுவையானது.
தற்போதைய நிர்வாகத்தால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில் உள்ளதால் அதனைத் தூக்கி எறிய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.