எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்து சந்தைக்கு விநியோகிப்பதற்கு எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடு முகங்கொடுத்துள்ள அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது சவாலான பணியாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெற்றோலிய உற்பத்திகளை மேற்கொள்ளும் நாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொண்டு அந்த நிறுவனங்களின் சொந்த நிதியின் ஊடாகவே இறக்குமதிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை மத்திய வங்கி அல்லது வங்கிகளிடம் இருந்து முதல் சில மாதங்களின் செயற்பாட்டுக்காக அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ளாது எரிபொருளை இறக்குமதி செய்யக் கூடிய நிறுவனங்களுக்கே குறித்த அனுமதி வழங்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோக சேவை வழங்குநராக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமே செயற்படும் எனவும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக குறித்த நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் அறவிடப்படும் எனவும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வசம் ஏற்கனவே காணப்படும் ஆயிரத்து 190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் புதிதாக நிர்மாணிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் லங்கா IOC மற்றும் புதிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எரிபொருள் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமே தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.