மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பான பரிந்துரைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய மின்சார கட்டணங்களை அதிகரிப்பதற்காக மின்சார சபை முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மாற்று யோசனைகளை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உருவாக்கியுள்ள மாற்று யோசனைகள் தொடர்பிலேயே பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உருவாக்கியுள்ள மாற்று யோசனைகள் இன்றைய தினம் இணையத் தளத்தின் ஊடாக வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்கள் இன்று முதல் எதிர்வரும் ஜுலை 18 ஆம் திகதி வரை தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பொதுமக்கள் தமது கருத்துக்களை தபால், மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் ஊடாக அனுப்பி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் வாய்மொழி மூலமான யோசனைகளை பெற்றுக் கொள்வதற்கு இணைய வழிக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.