எரிபொருள் விலையை குறைக்க எந்த சாத்தியப்பாடும் இல்லை, இப்போதுள்ள நிலையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதை தவிர மாற்று வழிமுறை ஒன்றுமே இல்லை. அவ்வாறு விலையை குறைக்கும் மாற்றுவழி என்னவென்பது குறித்தோ,அதற்கான வேலைத்திட்டம் என்னவென்பதும் எனக்கு தெரியவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நாட்டில் தொடர்ச்சியான எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
எரிபொருள் விலை குறைக்கப்படுவது குறித்து இன்னமும் அரசாங்கத்தில் எந்த பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எரிபொருள் விலையை குறைப்போம் என அரசாங்கத்தில் வாக்குறுதி கொடுத்தவர்களிடம் ஏன் எரிபொருள் விலை குறையவில்லை என மக்கள் கேட்க வேண்டும். எனக்கு எதிராக ஒரு சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் இறுதியாக எனக்கு 152 வாக்குகள் கிடைத்தன. ஆகவே நான் அறிவித்த முடிவு நியாயமானது என்பதை சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்போதுள்ள நிலையில் எரிபொருள் விலை குறையாது என்பதை நான் வெளிப்படையாக கூறினேன், எரிபொருள் விலையை குறைக்க முடியாது என்பதையும் நான் தெளிவாக கூறுகின்றேன்.
எரிபொருள் விலையை அதிகரித்தோம் என கூறி எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்த எதிர்கட்சியின் 43 உறுப்பினர்களில் ஒருவருக்கேனும் எரிபொருள் விலையை குறைக்க மாற்றும் வழிமுறை என்னவென்பதை கூற முடியாது போயுள்ளது.
ஆகவே இப்போதுள்ள நிலையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதை தவிர மாற்று வழிமுறை ஒன்றுமே இல்லை என்பதை முழு நாடும் ஏற்றுக்கொண்டுவிட்டது. அதேபோல் எரிபொருள் விலையை குறைக்கும் மாற்றுவழி என்னவென்பது எனக்கு தெரியாது. அதற்கான வேலைத்திட்டம் என்னவென்பதும் எனக்கு கூறத்தெரியவில்லை.
இவ்வாறான வழிமுறைகளை கையாண்டு எரிபொருள் விலையை குறைக்கலாம் என்ற திட்டம் யாரிடமும் இருந்தால் அதனை கூறினால் எம்மால் ஆராய்ந்து பார்க்க முடியும்.
எனது அமைச்சுப்பதவி நீக்கப்படுமா, அல்லது மாற்றப்படுமா என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது. அதனை ஜனாதிபதியும் பிரதமருமே தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், அமைச்சரவை உறுப்பினர்கள் இல்லாதவர்கள் எனது அமைச்சுப்பதவியை பறிக்க வலியுறுத்துவதனால் எனது அமைச்சுப்பதவி பறிபோகும் என நான் நினைக்கவில்ல. எந்தத் தவறும் செய்யாது எனக்கு வழங்கப்பட்ட அமைச்சுப்பொறுப்பை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்றார்.