இரத்தினபுரி – குருவிட்ட பகுதியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிவாரண சேவை அதிகாரி ஒருவர், அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு உள்பட்ட 144 குடும்பங்களைச் சேரந்த 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
236 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக, பாதிக்கப்பட்ட இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்ட மக்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறும் அவர் திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 13 நிவாரணக்குழுக்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடற்படை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அந்த நிவாரணக் குழுக்கள் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.