சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மசகு எண்ணெய் அடங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், 90 நாட்களுக்கு முன்னதாக மூடப்பட்ட சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நாளொன்றுக்கு ஆயிரம் மெற்றிக் டொன் டீசல், 600 முதல் 800 மெற்றிக் டொன் மண்ணெண்ணெய் மற்றும் விமானங்களுக்கான எரிபொருளை உற்பத்தி செயவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் தேவைக்கேற்ப போதுமான அளவு டீசல் மற்றும் பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், டீசல் அடங்கிய கப்பலொன்று எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி மற்றும் 14, 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.