பிரதமரதமரும் ஐ.தே. க. தலைவருமான ரணில் விக்ரமசிங்க, தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்வையில் நிதி அமைச்சுப் பொறுப்பினையும் வகிப்பார் என அறிய முடிகிறது.
அதன்படி நிதி அமைச்சராக, பிரதமர் ரணில் இன்று பதவியேற்கவுள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன.
தற்போது பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதியே செயற்பட்டு வரும் நிலையில், இன்று ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவிக்கு மேலதிகமாக நிதி அமைச்சு பொறுப்பினையும் ஏற்கவுள்ளார் என அந்த தகவல்கள் வெளிப்படுத்தின.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான விருப்பத்தை, வெளிப்படுத்தியதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.
முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி, நீதி அமைச்சர் அலி சப்றியிடம் நிதி அமைச்சின் பொறுப்புக்களை தொடருமாறு கோரியுள்ளார்.
அவர் அதனை தனது குடும்பத்தாரின் விருப்பமின்மையை வெளிப்படுத்தி மறுத்துள்ளதாக அறிய முடிகிறது. தொடர்ச்சியாக அவரிடம் குறித்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ள போதும் அவர் அப்பதவியை ஏற்க மறுத்துள்ளார்.
இந் நிலையில் அடுத்த தெரிவாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை அப்பதவிக்கு நியமிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசியல் கொள்கைகளுக்கு மதிப்பளித்து அவரும் நிதி அமைச்சினை ஏற்க மறுத்துள்ள பின்னணியிலேயே அவ்வமைச்சை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பிலேயே வைத்திருக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.