இந்தியாவினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவிகள் இன்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகள் கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த மனிதாபிமான உதவிகள் அடங்கிய கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரினால் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 9 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் அளவிலான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியன குறித்த மனிதாபிமான உதவிகளில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த மனிதாபிமான உதவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கடந்த 18 ஆம் திகதி அனுப்பப்பட்டதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 40 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய மனிதாபிமான உதவிகளின் முதற்கட்டமாக குறித்த மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனிதாபிமான உதவிகளின் மொத்த அளவு 5 தசம் 5 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.