இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பில் இருவேறு கருத்துக்கள் நிலவுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களும் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறினார்.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 20 வது திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கருதுவதாகவும், ஜனாதிபதியின் இராஜினாமா பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் அவர் கூறினார்.
“பாராளுமன்றத்தையும் பிரதமரையும் பலப்படுத்தும் 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவரும் 21வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியும் கலந்துரையாடி எதிர்காலப் பாதை குறித்து ஒரு ஏற்பாட்டிற்கு வர வேண்டும் என்று நான் பரிந்துரைத்துள்ளேன்” என்று பிரதமர் கூறினார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் நெற்செய்கைப் பருவத்திற்கு உரம் கிடைக்காததால் உணவு நெருக்கடி ஏற்படக் கூடும் எனவும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு உரம் கிடைக்காததால், வரும் நெல் சாகுபடி பருவத்தில் முழு உற்பத்தி இருக்காது, இதனால் உணவு நெருக்கடி ஏற்படும் என அவர் கூறினார்.
“ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில்தான் உலகளாவிய உணவு நெருக்கடியும் உருவாகும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை எப்படி வாழ்வோம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,” என்றார்.
நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பை (IUSF) ஒரு போராளிக் குழு என்று குறிப்பிட்டார்.
இது ஒரு போர்க்குணமிக்க இளைஞர் குழு ஆகும், வருடத்திற்கு குறைந்தது 5-6 ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது மற்றும் அவர்களுக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.
IUSF எதிர்ப்புக்கள் மட்டுமின்றி, பொது மக்கள் பொருளாதார நெருக்கடியின் விளைவாக அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் காரணமாகவும் போராட்டங்களை நடத்துவதைக் காணமுடிகிறது என்று பிரதமர் விக்கிரமசிங்க விளக்கினார்.