ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் சமகி ஜன பலவேகயவின் நாடாளுமன்றக் குழு இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடும் போது கலந்துரையாடவுள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடி காரணமாக வெற்றிடமாக உள்ள பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரின் பெயரை கட்சி முன்மொழியவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு SJB எந்த ஆதரவையும் வழங்காது எனவும், முன்னர் கூறியது போன்று 113 ஆசனங்களைப் பெரும்பான்மையாக பாராளுமன்றத்தில் கொண்டிருக்கவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
புதிய பிரதமர் ,ராஜபக்சேக்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எம்.பி.க்களின் ஆதரவை மட்டுமே நம்பியிருப்பதாக அவர் கூறினார்.
ஜனாதிபதி ,ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்திருப்பது, பதவியில் நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு SJB பாராளுமன்ற உறுப்பினரும் இலாகாக்களை ஏற்க மாட்டார்கள் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இதேவேளை, இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை தொடர்பில் இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய சமகி ஜன பலவேகய கட்சி பதிலளித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகியதன் பின்னர், எஸ்.ஜே.பி கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் விக்ரமசிங்க படுதோல்வியடைந்ததையடுத்து, ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தின் மூலம் நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்க வேண்டியதாயிற்று.
மக்களின் நம்பிக்கையை இழந்த இவ்வாறான ஒருவரை தேசத்தின் பிரதமராக நியமிப்பதும், அவரது தலைமையிலான அரசாங்கத்தை நியமிப்பதும் முழு உலகத்தின் முன் நகைச்சுவையாக மாறும் என பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்திரமான அரசாங்கம் அமையும் வரை எந்தவொரு வெளிநாட்டு நாடும் அல்லது வெளிநாட்டு நிதி நிறுவனமும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்காது எனவும் SJB பாராளுமன்ற உறுப்பினர் எச்சரித்துள்ளார்.