தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி, காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளையுடன் ஒரு மாதம் பூர்த்தியாகின்றது.
இதற்கமைய நாளை முதல் ஆரம்பமாகும் வாரத்தை, போராட்ட வாரமாக அறிவிப்பதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.
காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் இன்று 30ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சுமார் ஒரு மாதமாக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தில் இதுவரையில் முறுகல் நிலை எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.
கடந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் சீரற்ற வானிலை நிலவிய போதிலும் இன்று வரை தொடர்கின்றது.
இளைஞர் யுவதிகள், கலைஞர்கள், தொழிற்சங்கத்தினர், விசேட தேவையுடையவர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்துக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.