மாடு அறுப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைய செயற்படுமாறு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் பொரலெஸ்ஸ தெரிவித்தார்.
இதற்கு தேவையான நான்கு சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாடறுப்பு தடை செய்யவதற்கான அனுமதியை அமைச்சரவை அங்கீகரித்துள்ள நிலையில், இம்முறை குர்பான் கொடுப்பதில் சிக்கல்கள் நிலவலாமென கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள், குர்பான் கொடுப்பதற்கான அனுமதியை மேயர் ரோசி சேனநாயக்கா வழங்கியிருந்தார்.
எனினும் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர், கொழும்பு மாநகர எல்லைக்குள் மாடறுக்க அனுமதிக்க வேண்டாமென கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இதனால் முஸ்லிம் வட்டாரங்களிடையே, ஒரு குழப்ப நிலை உருவாகியுள்ளது.
இதுதொடர்பில் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் செயலாளருடன், தொலைபேசியில் தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,
மாடு அறுப்பதை நிறுத்த அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறதே தவிர, பாராளுமன்றத்தின் மூலமாக அதற்கான சட்டம் இயற்றப்படவில்லை.
எனவே எக்காரணம் கொண்டும் குர்பான் கொடுப்பதற்கு மாகாண சபைகள் அமைச்சு தடை விதிக்கக்கூடாதென கேட்டுக் கொண்டுள்ளார்.