சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை (29) நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வது தமது ஒரு முக்கிய கோரிக்கையை அமுல்படுத்துவதில் தங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரை அவர்களது அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்குமாறு கட்சி கோரியுள்ளது.
“சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் அமைச்சர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படாவிட்டால், வெள்ளிக்கிழமை (29) ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது” என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) அண்மையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதுடன், காபந்து அரசாங்கத்தை நியமிப்பதற்கான தனது கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வரை, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருப்பதற்கான தனது முடிவை அறிவித்தது.
அரசாங்கத்தில் இருந்து விலகிய போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் கீழ் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.
ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரண்டு எம்.பி.க்களையும் நீக்குமாறு கட்சி தற்போது அழைப்பு விடுத்துள்ளது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்ததையடுத்து, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.