கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக எயார் வைஸ் மார்ஷல் இந்திக்க விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் (KDU) புதிய உபவேந்தராக எயார் வைஸ் மார்ஷல் இந்திக்க விக்ரமசிங்க கடந்த (02 செப்டம்பர் 2026) பொறுப்பேற்றார். இந்நிகழ்வின்போது அவருக்கு இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
கண்டி தர்மராஜ கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரான இவர், 1993-ஆம் ஆண்டில் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 11-வது மாணவர் குழுவின் மூலம் இலங்கை விமானப்படையில் இணைந்து, 1996-ஆம் ஆண்டில் விமானம் மற்றும் பொதுப் பொறியியல் பிரிவில் பிளைன் ஆஃபீஸ்ர் பதவிநிலையில் நியமிக்கப்பட்டார்.
தனது நீண்டகால சேவையின்போது, இலங்கை விமானப்படையின் விமானப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொதுப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளை அவர் வகித்துள்ளார். மேலும் அவர் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் வானூர்திப் பொறியியலில் இளங்கலை அறிவியல் பட்டத்தையும், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் மனிதவள மேலாண்மையில் முதுகலை அறிவியல் பட்டத்தையும், இந்திய விமானப்படை தொழில்நுட்ப கல்லூரியில் வானூர்திப் பொறியியலில் முதுகலை பட்டயத்தையும், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் (SLSI) தர மேலாண்மையில் முதுகலை பட்டயத்தையும் பெற்றுள்ளார்.
அவர் சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி (DSCSC) மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரி (NDC) ஆகியவற்றில் பட்டதாரியும் ஆவார். அவர் ஐக்கிய இராச்சியத்தின் (UK) பட்டயப் பொறியாளர் மற்றும் ராயல் வானூர்தி சங்கத்தின் உறுப்பினர் தகுதி உட்பட பல உயர் தொழில்முறை தகுதிகளைப் பெற்றுள்ளார். நாட்டிற்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைக்காக “உத்தம சேவா பதக்கம்” (USP) அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.



