ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமை சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் சபையின் பிரதானி என்ற வகையில், தாக்குதலை தடுக்க அவர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, ஐந்து நீதியரசர்கள் அமர்வின் முன் நேற்று கூறியுள்ளார்.
புலனாய்வு தகவல்கள் கிடைத்து இருந்தும், ஈஸ்டர் தாக்குதல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தமது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நேற்று ஐந்து நீதியரசர்கள் அமர்வின் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, எல்.டி.பீ.தெஹிதெனிய, மர்த்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்கள் அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.
இந்த மனுக்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கத்தோலிக்க மதகுருக்கள் உட்பட 12 தரப்பினர் தாக்கல் செய்துள்ளனர்.