இன்று நள்ளிரவு முதல் ஆகக்குறைந்த பேருந்து பயணக் கட்டணத்தை 2 அல்லது 3 ரூபாவினால் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து போக்குவரத்து சங்க பிரதிநிதிகளுக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை இன்றைய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில், தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அறிவிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக, பேருந்து பயண கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் அல்லது எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என பேருந்து சங்கங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை, டீசல் இன்மை காரணமாக, தமது தொழிற்துறையை கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
எனினும், பயணிகளின் நலன் கருதி இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.