அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் செவ்வாய் கிழமை வீதியில் இறங்கி போராட ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன் போது ஜனாதிபதிக்கு செய்தியை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வீட்டிற்குள் இருந்துக்கொண்டு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தாது, வெளியில் இறங்கி போராட வாருங்கள். கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவரும் செவ்வாய் கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு கொழும்புக்கு வாருங்கள்.
மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படுவது மட்டுமின்றி ஜனாதிபதி இருக்கும் இடத்தை தேடிச் செல்வோம். மக்களின் நிலைப்பாடுகளுக்கு செவிசாய்கவில்லை என்றால், கடும் முடிவுகளை எடுப்போம்.
இலங்கையில் 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் இப்படியான நிலைமை ஏற்படவில்லை.இவ்வாறு வீழ்ச்சியடைந்து போன அரசாங்கங்களை கண்டிருக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு மகிந்த தோல்வியடைவதை கண்டோம்.
மகிந்த தோல்வியடைந்த பின்னர், அவர்கள் 2019 ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்சவை கொண்டு வந்தனர். கோட்டாபய ராஜபக்ச ஒரு வருடம் செல்லும் முன்னரே தோல்வியடைந்தார்.
அதன் பின்னர், அரசியலமைப்புத் திருத்தங்களை செய்து ஏழு மூளை உள்ள ஐயாவை கொண்டு வந்தனர். அவரும் தோல்வியடைந்துள்ளார். நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மூன்று பேரும் தோல்வியடைந்துள்ளனர்.
வேலை செய்யும் வீரன் என்ற பாடலை கேட்ட எமக்கு, அதில் உள்ள அர்த்தம் புரியாமல் போனதோ தெரியவில்லை. வேலை செய்யும் வீரனா, விலைகளை அதிகரிக்கும் வீரனா என்று எமக்கு கேள்வி எழுகிறது எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்