களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்துக்கு 12 நாட்களாக டீசல் கிடைக்கவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை சாதகமான பதில் கிடைக்க வில்லை என இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
துல்ஹிரிய மற்றும் மத்துகம மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சப்புகஸ்கந்த அனல் மின் நிலையத்திலும் ஒரு நாளுக்கு மாத்திரமே எரிபொருள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மின் வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மின்வெட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை வரலாம் என்றும் நவமணி தெரிவித்தார்.
இன்றைய தினம் (14) ஏற்படவுள்ள சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு மின்வெட்டை மேற்கொள்வதா இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் படிப்படியாகக் குறையும் பட்சத்தில் அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் நீர் நெருக்கடி ஏற்படக் கூடும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.
தற்போதைய நீர் மட்டம் இரண்டு வாரங்களுக்கு மின்சாரம் வழங்க மட்டுமே போதுமானது என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே மிகக் குறைந்த நீர்மட்டம் என்றும் அவர் கூறினார்.
தற்போது ஓரளவு மழை பெய்து ஏப்ரல் மாதம் வரை அந்த மழை நீடித்தால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயரும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, தொழில்நுட்பக் கோளாறு காரண மாக நிறுத்தப்பட்ட யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை நேற்று (13) பிற்பகலின் பின் மீண்டும் செயற்படுத்த முடிந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும் திடீரென பழுதடைந்த களனிதிஸ்ஸ சோஜிஸ்டிஸ் மின் உற்பத்தி நிலையமும் தற்போது தேசிய மின் கட்டமைப்புடன் இணைக் கப்பட்டுள்ளது.
270 மெகாவோட் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையமும், 130 மெகாவோட் திறன் கொண்ட சோஜிஸ்டிஸ் மின் உற்பத்தி நிலையமும் கடந்த வார இறுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூடப்பட்டன.
இதன் காரணமாக தீவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Date:
அனல்மின் நிலையத்தில் டீசல் இல்லை; மின் வெட்டு ஏற்படும் அபாயம்
