இதற்கமைய இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரையும் அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் டொலரையும் கடனாக பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரிசி, பருப்பு மற்றும் மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்களை இந்த கடன் உதவிகளின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த இறக்குமதிகள் 6 மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் கடன் உதவியின் கீழ் கிழங்கு, வெங்காயம், பருப்பு மற்றும் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இந்த கடன் உதவிகளை தவணை அடிப்படையில் மீள செலுத்துவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பினை பதப்படுத்துவதற்கான தொழிற்சாலை ஒன்றினை நிர்மாணிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையை கொழும்பு அல்லது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை அண்மித்து நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.