தேர்தல் ஒன்றை முன்னெடுக்கும் போது முன்னேற்பாடாக செயற்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா,”மாகாணசபைத் தேர்தலை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளின் நிர்வாகத்தில் மாகாணசபைகள் இயங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என தெரிவித்துள்ளார்.
மேலும்”இக்காலகட்டத்தில் மாகாணசபை தேர்தல் இடம்பெற வேண்டுமாயின் அதற்கான அனைத்து முடிவுகளையும் நாடாளுமன்றமே எடுக்க வேண்டும். இறுதித்தீர்மானத்தை நாடாளுமன்றம் தீர்மானிப்பதாக இருந்தால் உடனடியாக தேர்தலை நடாத்த தயாராக உள்ளோம்”என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. ஹேவா தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் இருக்கவேண்டிய இடத்திற்கு பதிலாக அதிகாரிகள் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்களின் தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது எனவும் நிமல் ஜீ. ஹேவா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பீ.திவரத்ன.கே.பீ.பீ.பத்திரன. மேலதிக ஆணையாளர் பீ.சீ.சீ. குலரத்ன தேர்தல் ஆணைக்குழுவின் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சன்னி பீ.டி.சில்வா திருகோணமலை மாவட்டத்தின் உயர் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







