வவுனியா மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சின் ஏற்ப்பாட்டில் ‘நீதிக்கான அணுகல்’ எனும் தொனிப்பொருளில், நடமாடும் சேவை ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றது.
இந்த நிலையில் குறித்த விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்து, வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் பின்னர், நிகழ்வு இடம்பெறுகின்ற வளாகத்திற்குள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்நுளைய முற்பட்டபோது, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர்களை உள்ளே அனுமதிக்காமையினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும், அது தொடர்பான விசாரணைகளுக்காக பிரசன்னமாகியிருந்த அதிகாரிகளுக்கும் இடையில் கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது.